முக்கியச் செய்திகள் தமிழகம்

விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!

கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நடந்த திருமணம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.


மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் – மதுரை தொழிலதிபரின் மகள் தீக்சனா திருமணம் தான் இப்படி விமரிசையாக விமானத்தில் நடந்தேறியது. விமானத்தில் பறந்தபடி திருமணத்தை கண்டுகளித்த உறவினர்களும் மகிழ்ச்சியில் துள்ளினர்.


ஆனால் இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறது. கொரோனா 2வது அலை கொடூரமாக வீசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தனி மனித இடைவெளியின்றி, முககவசம் இன்றி இந்த திருமணம் நடந்திருப்பதுதான் அதற்கு காரணம். இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருமணம் நடந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அனைவருக்கும் தற்காலிக பணி வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.


மதுரை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் சிவில் விமான போக்குவரத்துத் துறை முழு அறிக்கை கோரியுள்ளது. விமானத்தில் திருமணம் நடக்க இருப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கம் ஏற்கப்படுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் விமானத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பயணித்த மணமக்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய சிவில் விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.


கொரோனா 2வது அலையில் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் சமூக பொறுப்பின்றி, தனி மனித இடைவெளியின்றி நடந்த இந்த திருமணம் பற்றி சமூக ஆர்வலர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

Advertisement:

Related posts

நீட் தேர்வு தாக்கம்: நாளை ஆலோசிக்கும் ஏ.கே.ராஜன் குழு!

Ezhilarasan

’உண்மையாக இருப்பேன்; உங்களுக்காக உழைப்பேன்’: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

Karthick

கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

எல்.ரேணுகாதேவி