நம்மை சீண்டிப் பார்ப்பது போல் பதிவு போட்டால் காமெடியாக பதிலடி கொடுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!

திமுக ஐடி விங் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக-வை சீண்டிப் பார்ப்பது போல் யாரேனும் பதிவு போட்டால் அவர்களுக்கு காமெடியாக பதிலடி கொடுங்கள் என்று தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் தமிழ் நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது,

இன்றைக்கு நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய முதல் விஷயமே ‘ஃபேக் நியூஸ்’ தான். தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ண வேண்டும். என்று எதிரிகள் நினைக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் டிசைன் டிசைனாக பொய்ச் செய்திகளைப் பரப்பிப் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த பொய்ச் செய்திகள் எனும் சவால்களை நாம் முறியடித்தாக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் மிக விழிப்புடன் ஆன்லைனில் செயலாற்ற வேண்டும்.

பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கென்றே, நிறைய ‘ரைட் விங்’ அக்கவுண்ட்களை பாஜக நடத்திக் கொண்டு வருகிறார்கள். நம்மைப் பற்றி ஒரு பொய்ச் செய்தி பரப்புகிறார்கள் என்றால், உடனே ஆதாரத்துடன் கமெண்ட்ஸ், ரிப்ளைஸ்-இல் நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அந்தப் பொய்ச் செய்தியைப் படிப்பவர்களில் பாதி பேர் நம்முடைய விளக்கத்தைப் படித்தால் கூட அது உங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.

நம்மைச் சீண்டிப் பார்ப்பது போன்று நிறைய பதிவுகளைப் போடுவார்கள். ஆனால், நாம் அதை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும். காமெடியாக பதிலடி கொடுங்கள். கிண்டலாகப் பேசுங்கள். ஆனால், எதுவாக இருந்தாலும் பொறுமையாக, கூலாக டீல் செய்யுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும், உருவாக்கும் ஒவ்வொரு கன்டென்டையும் பொறுப்புடன் உருவாக்குங்கள். நம்முடைய எதிரிகளுக்கு இருக்கும் ஊடக சொகுசு நமக்கு என்றைக்குமே இருந்தது கிடையாது. தோழமைச் சக்திகளுடன் சிண்டு முடியும் வேலைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக் கூடாது. கட்சியில் இருந்து வரும் அஃபிசியல் செய்திகளை மட்டும் நம்பிச் செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.