முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

விசிக முதல் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வரை…யார் இந்த செல்வப்பெருந்தகை?


தங்கபாண்டியன்

கட்டுரையாளர்

நீண்ட ஆலோசனை கூட்டங்கள், விவாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரசின் சட்டப்பேரவைக் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை… விளம்பர வெளிச்சத்தை அதிகம் விரும்பாத இந்த போராளி தலைவரை பற்றி பார்க்கலாம் …


காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்க எண்ணிக்கையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளது. 25 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 18 இடங்களில் வெற்றி வாகை சூடியது. முந்தைய பேரவைகளில் காங்கிரஸ் குழு தலைவராக இருந்தவர்கள் யாரும் போட்டியிடாததால் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

18 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் , சோளிங்கர் முனிரத்தினம், விளவங்கோடு விஜயதரணி, உள்ளிட்ட ஐந்து பேர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால் இரண்டு முறை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. மூன்றாம் முறையாக நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் முடிவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் முடிவுப்படி ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான செல்வப்பெருந்தகை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வபெருந்தகையை பற்றி பார்ப்போம்…


சென்னை மாநகரத்திற்கு அருகில் உள்ள படப்பை – மணிமங்கலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்த பின் சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார். விடுதலைப்போராட்ட வீரரும், பொதுவாழ்வில் சத்தமில்லாமல் செயல்பாடுகள் மூலம் பணியாற்றியவருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு வை ரோல் மாடலாக கொண்டு செயல்படுபவர் செல்வப்பெருந்தகை.


ரிசர்வ் வங்கியில் 16 ஆண்டுகள் பணியாற்றினாலும், பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறையவேயில்லை. இதனால் 2001 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பில் இடம் பெற்றார். அக்கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்த நிலையில் பொதுச்செயலாளராக இருந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் விசிக சார்பில் செல்வப் பெருந்தகையும், ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். அப்போது விசிக சட்டமன்ற குழு தலைவராக செயல்பட்டவர் செல்வப் பெருந்தகை.


பின்னர் திருமாவளவனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகினார். பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநில தலைவர் ஆனார்.


அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் என்ன பதவி வேண்டும் என கேட்ட ராகுலிடம் காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவில் எனக்கு பதவி வழங்குங்கள் என கூறினார். அதைப் பெற்றுக்கொண்ட பிறகு சும்மா இருந்துவிடாமல், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் செங்கம் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.


ஆனால் சளைக்காத மக்கள் போராளியான செல்வப் பெருந்தகை, வெற்றியிலும் தோல்வியிலும் மக்கள் பக்கமே நின்றவர். உதவி கேட்டு வருபவர்களுக்கு விளம்பரமின்றி உதவும் உள்ளம் கொண்டவர்.
நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வப் பெருந்தகை, இரண்டாவது முறையாக பேரவைக்கு சென்றுள்ளார் செல்வப்பெருந்தகை. வென்ற உடனேயே, தொகுதிக்கு சென்று, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த , ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை , தன் சொந்த செலவில் கொரோனா தடுப்பு சேவை மையமாக மாற்றினார். மேலும் தன்னுடைய இரண்டு விலை உயர்ந்த கார்களை கொரோனா சிகிச்சை ஆம்புலன்சாக சொந்த செலவில் மாற்றியுள்ளார்.


காங்கிரசில் வலிமையான தலைவராக இருந்த இளையபெருமாளுக்கு பிறகு பட்டியலினத்தவர் பலர், எம்எல்ஏ , எம்.பி. பதவிகளைப் பெற்றாலும் மாவட்ட அளவிலே நின்று விட்டனர். ஆனால் செல்வப் பெருந்தகையோ, அப்படி குடத்திலிட்ட விளக்காக இருக்காமல், குன்றிலிட்ட விளக்காக ஒளிர்ந்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டங்களில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும்தான் பங்கேற்க முடியும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் செல்வப்பெருந்தகை பயணிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டுவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Advertisement:
SHARE

Related posts

“தமிழகத்தில் தாமரை என்றும் மலராது”: ஸ்ரீநிதி சிதம்பரம்

Halley karthi

5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

Halley karthi

நடிகர் ஆர்யா மீதான மோசடி வழக்கு; திடீர் திருப்பம் 2 பேர் கைது

Halley karthi