தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!

தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளாக 15,416 பேரில் வெறும் 14 கைதிகள் மட்டுமே நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை புழல்,…

தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளாக 15,416 பேரில் வெறும் 14 கைதிகள் மட்டுமே நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், திருச்சி,கோவை, கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம் ஆகிய பகுதியில் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளது. இதனைத் தவிர்த்து 100-க்கும் மேற்பட்ட துணைச் சிறைச்சாலைகள் உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளுக்குத் தேர்தல்களில் ஓட்டுபோடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவர்களுக்கும் வாக்களிக்க உரிமை இல்லை.

மேலும் முதல் முறையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. இந்நிலையில் தமிழக சிறைச்சாலைகளில் முதல் முறையாக கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் கோவை மத்திய சிறைச்சாலையைச் சேர்ந்த 5 பேரும், கடலூர் மத்திய சிறையில் உள்ள 7 பேர் மற்றும் பாளையங்கோட்டை, சென்னை புழல் சிறையில் தலா ஒருவரும் நடைபெறவுள்ள தமிழக தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்துள்ள 14 கைதிகள் தபால் வாக்களிப்பார்கள்.

தண்டனை, விசாரணை மற்றும் நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளுக்கு ஓட்டுரிமையைப் பறிப்பது அவர்களின் ஜனநாயக கடமைக்கு எதிரானது என சமூக ஆர்வலர்களும், மூத்த வழக்கறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.