25 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

#தமிழ்நாடு – தனித்த அடையாளமும் வரலாறும்


ஜோ மகேஸ்வரன்

கட்டுரையாளர்

’நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்…’ என்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர். ’செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…’ என்கிறார் மகாகவி பாரதி. பரிபாடல், பதிற்றுப்பத்து, சங்க இலக்கியம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்பர், சேக்கிழார் எடுத்தாண்டுள்ளனர். ஆனால், இந்திய அரசு நிர்வாகரீதியில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்கிற பெயர் எளிதில் கிடைத்துவில்லை. அது குறித்து பார்க்கலாம்.,

மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழ் நிலப்பரப்பை ‘ தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும், இந்தியைத் கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 1956ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி, விருதுநகரில் சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். காமராஜர், அண்ணா, மாபொசி, ஜீவா உள்ளிட்ட தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லியும் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. உண்ணாவிரதம் இருந்த அவர், 75 நாட்களுக்குப் பிறகு தனது 78வது வயதில் ஒரு கோரிக்கையும் நிறைவேறாத நிலையில் உயிரை விட்டார் சங்கரலிங்கனார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்னர் 1953ம் ஆண்டு பொட்டி ஸ்ரீ ராமுலு என்பவர் ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிரைத் துறந்தார். தொடர் நெருக்கடிகளால், மொழிவாரி மாநிலங்களை உருவாக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த பகுதிகள் ஆந்திரா முதல் மொழி வழி மாநிலமாகியது. தொடர்ந்து, கன்னடம் பேசுவோர் நிறைந்த பகுதி கர்நாடகம், மலையாள மொழியினருக்கு கேரளா ஆகிய மாநிலங்கள் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழி மாநிலங்கள் உருவாகின.  இதைத்தான் நவம்பர் 1ம் தேதி, ஆந்திரா, கர்நாடக, கேரள மக்கள் மாநில உதய தினமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் தமிழ்ச்சான்றோர் பேரவை நிறுவனர் அருணாச்சலனார் தமிழகப் பெருவிழா என்று நவம்பர் 1ம் தேதி நடத்தி வந்தார். மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழ்நாட்டு பகுதிகள் பறிபோயின. ஆகையால் இந்த பிரிவினையை கொண்டாடாதவர்களும் உள்ளனர்,

தோற்கடிக்கப்பட்ட தீர்மானங்கள்

அதேநேரத்தில், சங்கரலிங்கனார் உயிர்த் தியாகம் செய்தும், மதராஸ் மாகாணமாக இருந்தது மதராஸ் ஸ்டேட் என்று மட்டுமே மாறியது. தமிழ்நாடு என்கிற பெயர் வைக்கப்படவில்லை. இதையடுத்து மாபொசியின் தமிழரசுக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தினர். சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பெயர் மாற்றத்தை கோரி கொண்டுவந்த தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டதும் ஒரு கசப்பான வரலாறு என்கிறார்கள்.

குறிப்பாக, சங்கரலிங்கனார் உயிர்த்தியாகத்திற்கு பிறகு 1957ம் ஆண்டு, மே 7ல் சட்டப்பேரவையில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இந்த தீர்மானம் நிறைவேறும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தீர்மானத்திற்கு ஆதரவாக 42 பேரும் எதிராக 127 பேரும் வாக்களித்ததால், தீர்மானம் நிறைவேறவில்லை. 1961 ஜனவரி 30ல் சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போதும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்தியா நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி பெயர் மாற்றத்திற்கு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சித்தார். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் பூபேஷ் குப்தா அந்த மசோதாவை கொண்டு வந்தார். அப்போது, அறிஞர் அண்ணாவும் வலுவான வாதங்களை முன் வைத்தார். ஆனாலும் வெற்றி கிட்டவில்லை. இதையடுத்து 1963ம் ஆண்டு சட்டப்பேரவையில் அரங்கண்ணல் கொண்டு வந்த தீர்மானமும் தோல்வியடைந்தது.

தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றம் செய்வது பிரிவினையை முன்வைப்பது போல் உள்ளது என்கிற அச்சத்தாலும், பெயரை மாற்றினால் ஆவணங்களில் எல்லாம் மாற்ற வேண்டும். இது சாத்தியமில்லை என்று சொல்லியும் அப்போதைய அரசு தவிர்த்தது. ஆனால், நிர்வாக வசதிக்கென பிரிட்டிஷார் ‘மதராஸ் மாகாணம்’ என்று சொன்னாங்க. அத அப்படியே நாமும் தொடர வேண்டுமா? நம்ம அடையாளங்களை நாம காக்க வேண்டாமா? என்கிற கேள்வியை முன் வைத்து பெயரை மாற்றியே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக போராட்டங்கள் தொடர்ந்தன.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே போராட்டங்கள் நடைபெற்றாலும் 1967ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தமிழ்நாடு… தமிழ்நாடு… தமிழ்நாடு என்று முதலமைச்சர் முழங்க வாழ்க…வாழ்க.. வாழ்க என்று உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஏற்பளித்தனர். இதையடுத்து ஓராண்டிற்கு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டு, மதராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

இதில், சுவாரஸ்ய நிகழ்வுகளும் உண்டு, குறிப்பாக 1924ம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக் காரியாலயம் என்று இருந்தது. ஆண்ட காங்கிரஸில் கட்சிரீதியில் தமிழ்நாடு என்று முன்பே இருந்தது. ஆனால், ஆட்சி, நிர்வாகரீதியில் தமிழ்நாடு என்பதை காங்கிரஸ் தலைவர்கள் தவிர்த்ததும் வியப்பான ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் தான் தமிழ்நாடு இல்லை என்று விமர்சனம் செய்யப்பட்டது.

பிரிட்டிஷாரின் நிர்வாக வசதிக்காக இந்தியா என்று கட்டமைக்கப்பட்டது. மதராஸ் மாகாணமும் அப்படித்தான் வந்தது. ஆனால், இந்தியா என்கிற சொல்லுக்கு முந்தையது தமிழ்நாடு. இந்த வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் தமிழ்நாடு என்கிற அடையாளத்தை அழிக்க, தவிர்க்க தற்போது வரை முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்.

மேலும், பெயரில் என்ன இருக்கிறது என்று கடந்து சென்று விட முடியாது. பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது. தமிழ்நாடு… தனித்த அடையாளம், வரலாற்றை கொண்டது என்கிறார்கள் அறிஞர்கள்.

  • ஜோ மகேஸ்வரன் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy