பேரிடர்களை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் தாக்கர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் உத்தண்டி நயினார் குப்பத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டால் அந்த தகவல் கடலோர பகுதிகளுக்கு சென்றடைவது, மக்களை அப்புறப்படுத்தி முகாம்களில் தங்க வைப்பது, கடலில் சிக்கித் தவிப்பர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது என பல்வேறு ஒத்திகை நடைபெற்றது.
தீயணைப்புப் படையினர், தமிழ்நாடு மீட்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், வனத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஒத்திகையில் பங்கேற்றனர். மீட்பு ஒத்திகையை டிரோன் கேமராக்கள் மூலமாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அதிகாரிகள் ஒருங்கிணைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் தாக்கர்…பேரிடர்களை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதாகவும், முழுமையாக மாநிலம் முழுவதும் தயார் நிலையில் உள்ளனர், அனைத்து ஒத்திகைகளும் நிறைவாக உள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 இடங்களை தேர்வு செய்து வெள்ளம் ஏற்பட்டால் ஏற்படும் அபாயத்தை எரிர்கொள்வது குறித்து ஒத்திகை நடைபெற்றதாகவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை என்றார். பேரிடர் இப்போதுதான் வரும் என எதிர்பார்க்க முடியாது, வரும்போது தற்காத்துக்கொள்ள வேண்டும் எனவும், 5,500க்கும் மேற்பட்ட ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பேரிடர் ஏற்பட்டால் அதிகாரிகளும், தன்னார்வலர்களும் அந்த இடத்திற்கு வருவதற்கு அரைமணி நேரமாகும் என தெரிவித்தார்.







