ஒத்திகை நிகழ்ச்சியில் உயிருடன் ஆட்டை ஏரியில் வீசி ஒத்திகை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நிலவும் தென் மேற்கு பருவமழை காரணமாகவும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பருவமழை துவங்கிய காரணத்தால் வருவாய் பேரிடர் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழு சார்பில், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலையில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்டு முதலுதவி அளிப்பது, தீ விபத்துகளை எவ்வாறு கையாளுவது என்று ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் உயிருடன் இருந்த ஆட்டை ஏரியில் தூக்கி வீசி அதனை மீட்பது போன்று செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள ஆட்டை வதை செய்வது போல் தண்ணீரில் தூக்கி வீசி ஒத்திகை நடத்தப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







