தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு விராலிமலை திமுக வேட்பாளர் பழனியப்பன் கண்ணீர்விட்டு அழுத காணொலி வைரலாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், பரப்புரையின்போது வேட்பாளர்கள் கவனம் ஈர்க்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தென்னலூர் பழனியப்பன் போட்டியிடுகிறார். இரு தரப்பினரும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பரப்புரையில் தன்னுடைய மகள்களை களமிறக்கி வாக்கு சேகரிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், அதையெல்லாம் கடந்து மக்களுக்காக உழைத்துக்கொண்டிருப்பதாகவும் உருக்கமாகப் பேசி பரப்புரை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் விராலிமலை திமுக வேட்பாளரான பழனியப்பனும் உருக்கமாகப் பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “30 ஆண்டு காலம் அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கும் எனக்கு கடைசி ஒரு வாய்ப்பாக தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தேர்தலை நான் இறுதித் தேர்தலாகவே கருதுகிறேன், உங்களுக்காக உழைப்பதற்கு எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று குறிப்பிடுகிறார்.
நான் எதற்கும் ஆசைப்பட்டதில்லை, பொது வாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டேன் என்று குறிப்பிட்ட பழனியப்பன், “உங்களுக்காக உழைப்பதை பெருமையாகக் கருதுகிற உங்களின் சகோதரன் பழனிப்பனுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என்னை கைவிட்டுவிடாதீர்கள்” என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.