தமிழ்நாடு அரசியலில் நடக்கும் பிரிவினைவாத செயல்பாடுகள் குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 4 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “பாஜக சார்பில் வெற்றிபெற்ற 4 எம்.எல்.ஏ.க்களும் இன்று பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்பின்போது பிரதமர் நீர் சேமிப்பு குறித்து அறிவுறுத்தினார், தமிழகம் குறித்தும் கேட்டறிந்தார்”என்று கூறினார்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஆன்மீக தலங்கள் உள்ளதாகவும், ஆகவே சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக கூறிய முருகன், “தமிழக நலன் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ்நாடு அரசியலில் நடைபெறும் தேச பிரிவினை வாத செயல்பாடுகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். குறிப்பாக ஜெய்ஹிந்த் விவகாரத்தையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்” என்றும் கூறினார்.
மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க பிரதமர் அறிவுறுத்தியதாகவும், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி தமிழ்நாட்டில் வீணடிக்கப்படுவதை தரவுகளோடு விளம்பரப்படுத்துங்கள் என பிரதமர் குறிப்பிட்டதாகவும் எல்.முருகன் கூறினார்.







