சமீபத்தில் கனாடா நாட்டின் பழைய உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விக்டோரிய மகாராணி மற்றும் இரண்டாம் எலிசெபத்தின் சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளது.
கனாடா தொடக்கத்தில் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 15ம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டிற்குள் நுழைந்த ஐரோப்பியர்கள் 1763ல் கனடாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1763களிலிருந்து பிரிட்டன் கனடாவை ஆண்டு வந்தது. இந்த காலகட்டத்தில் உண்டு உறைவிட பள்ளிகள் கத்தோலிக்க கிருத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டது. இப்பள்ளிகளில் வலுக்கட்டாயமாக 1,50,000க்கும் அதிகமான கனடா பூர்வீகக்குடிகளின் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். ஐரோப்பியர்களின் வருகைக்கு கனடாவின் பூர்வீகக்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு இணங்காத பெற்றோர்கள் சிறைசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 1982ல் கனடா தனி நாடாக உருவானது. ஆனாலும், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கனடாவின் ராணியாக தொடர்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த உண்டு உறைவிட பள்ளிகளில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 6,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியான சூழலில், கனடாவின் பழங்குடியின அமைப்பு சார்பில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள காம்லூப்ஸ் உண்டு உறைவிட பள்ளியில் ரேடார் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று கனடா பழங்குடியின அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வின்னிப்பெக் நகரின் சட்டமன்றத்திற்கு வெளியே உள்ள இருந்த விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத்தின் சிலைகளை போராட்டக்காரர்கள் கீழே வீழ்த்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழவில்லையென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ம் தேதி கனடாவில் தேசிய விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இந்த விழா கொண்டாட்டங்களுக்கு தடை பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலை தகர்ப்பு சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் கனட பழங்குடியினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரிட்டனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.