அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
டிசம்பருக்குள் முடிவு எடுக்க வேண்டும்!
“தொகுதி மறுவரையறை மசோதாவை ஏற்கெனவே நாங்கள் வரவேற்றுதான் வருகிறோம். இதற்கு இந்த டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இல்லையென்றால், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுவிடும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நடந்தால் நமக்கு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையாது. மாறாக, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொண்டால் தமிழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பே அடிப்படை!
மேலும், இதுதொடர்பாக மத்திய பாஜக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதே நடைமுறை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே பல்வேறு அரசியல் கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாகவும், திமுக மட்டுமின்றி இந்தியாவின் பல கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்!’
தொடர்ந்து, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டது என்றும், இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தனது பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்படாவிட்டால், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




