“ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்!” – தொகுதி மறுவரையறை குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை!

தொகுதி மறுவரையறை மசோதா தமிழர் கலாசாரம், தமிழ் மொழி மற்றும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

ஸ்டாலினைச் சந்தித்த இந்தியா கூட்டணித் தலைவர்கள்!

மத்திய அரசு நாளை (நவம்பர் 30) மக்களவையில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. தற்போது திமுகவுக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால், மசோதாவை நிறைவேற்றுவதில் திமுகவின் ஆதரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், திமுகவின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சியாக இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் இன்று திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனையின்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், தனது நிலைப்பாட்டில் இருந்து மாற திமுக மறுத்துவிட்டது.

‘தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்!’

இந்தச் சந்திப்புக்குப் பிறகு டெல்லி புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை நடவடிக்கை இந்தியா முழுவதையும் பாதிக்கும் என்றும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 815 தொகுதிகளையும் மறுவரையறை செய்ய பாஜகவை அனுமதித்தால், தொகுதிகளின் தன்மையையே மாற்றிவிடுவார்கள் என்று ஸ்டாலினிடம் எடுத்துரைத்ததாகக் கூறினார். ஏற்கெனவே அஸ்ஸாம், ஜம்மு – காஷ்மீரில் இந்தத் திட்டத்தைச் சோதித்துப் பார்த்துள்ள பாஜக, தற்போது நாடு முழுவதும் இதனைச் செயல்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

‘ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்!’

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “தமிழ்நாட்டின் பாதுகாவலராக உள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உள்ளது. பாஜகவின் மோசமான திட்டம் நடைபெறாமல் இருப்பதைத் தடுப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தமிழர்களுக்கு எதிரானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொகுதி மறுவரையறை மூலம் மக்களவையில் 850 இடங்களைக் கொண்டுவருவதற்கு பாஜக முயற்சிக்கிறது.

இது இந்திய அரசியலமைப்பையே மாற்றிவிடும். ஒருவேளை பாஜக இதனைச் செயல்படுத்தினால், இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாசாரத்தின் மீதான தாக்குதலும் தொடங்கிவிடும். தமிழ்க் கலாசாரம், தமிழ் மக்கள், தமிழ் மொழி ஆகியவற்றுக்கு இந்த மசோதா அச்சுறுத்தலாக அமையும் என்பதை ஸ்டாலினிடம் எடுத்துரைத்தோம்” என்று தெரிவித்தார்.

திமுக தனது முடிவில் உறுதி!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளித்துள்ள ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தியபோதிலும், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்துவிட்டார். இதனால், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.