தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரை மாற்றக் கோரி பல்வேறு இடங்களில் காங்கிரஸார் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் உள்ள கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவாரா என்பது குறித்து காணலாம்.
இந்திய ஒற்றுமைப் பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்த பயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கட்சியினர் சொல்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் குமரிக்கு அருகில் நெல்லை மாவட்டத்தில் தொடங்கியுள்ள பிரச்னை டெல்லி வரை சென்றுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். கட்சிப் பணியில் அனுபவம், அரவணைத்து செல்லும் பக்குவம், கவரும் பேச்சாற்றல் என்று வலம் வரும் அவருக்கு கட்சிக்குள்ளாகவே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இது கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக வெடித்தது.
சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் முன்னிலையில் அதிருப்தி, வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை மாவட்ட தலைவருக்கும் நாங்குநேரி எம்.எல்.ஏ-விற்கும் இடையிலான அரசியல் போட்டி, சென்னையில் அடிதடியாக மாறியது. இந்த பிரச்னை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில், ஒரு தரப்பிற்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி செயல்படுவதாக மற்றொரு தரப்பு
குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று, தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது மாநிலத் தலைவர் மாற்றம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர். இதை மேலிடம் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், மாநிலத் தலைவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவார் என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.
இது குறித்து சட்டப்பேரவைக் காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகையிடம் நியூஸ்7 தமிழ் கேட்டதற்கு, “தலைவரை மாற்றக்கோரி நாங்க டெல்லி போகல… இது ஒரு வழக்கமான பயணம்தான். சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்தும் விவாதித்தோம்” என்றார்.
டெல்லி சென்ற தலைவர்களின் குழுவிற்கு உடனடி சாதக பதில் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், கோஷ்டி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸில், மூன்றாண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ள மாநிலத் தலைவரை மாற்றக்கோருவதும் அதற்காக டெல்லி வரை சென்று மேலிடத்தில் முறையிடுவதும் சகஜம்தான். எனவே, மாநிலத் தலைவரை மாற்ற தற்போதும், அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆனால், “மாநிலத் தலைவர் மாற்றம் இப்போது இல்லை. அதற்கான தேவையும் இல்லை” என்று அடித்துச் சொல்கிறார்கள் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள். “ஏதோ நடக்குதுங்க… மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு மாற்றம் இருக்கு. அது மாநிலத் தலைவர் மாற்றமாகவும் இருக்கலாம். எம்.பிக்கள் செல்லக்குமார், மாணிக்கம் தாக்கூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி… உள்ளிட்டோரில் ஒருவர்தான் அடுத்த தலைவர்” என்கிறார்கள் சிலர்.
மேலும், “காங்கிரஸில் நிலவுவதை கோஷ்டி பூசல் என்று சொல்லக்கூடாது. இது உட்கட்சி ஜனநாயகத்தின் வெளிப்பாடு. யார் தலைவராக வந்தாலும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுப்போம்” என்கிறார்கள் கோஷ்டிசாரா தலைவர்கள். தமிழ்நாட்டில் தொடங்கிய, ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் நிறைவிற்கு முன்பே மாநில காங்கிரஸ் கட்சியில் மாற்றம், தாக்கம் இருக்குமா…?







