ஜவுளித்துறையில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது- மத்திய அமைச்சர்

ஜவுளித்துறையில் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.  கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ்…

ஜவுளித்துறையில் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ் பேர்-2022” கண்காட்சியில் மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி மற்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இந்த டெக்ஸ்பேர் நிகழ்வில் பங்கேற்றதில் மகிழ்கின்றேன். கொரோனா காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவது தள்ளிபோனது. பெரிய துறையான ஐவுளித்துறையில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. வேலை வாய்ப்பு, புதிய முயற்சிகள், புதிய ஏற்றுமதிகள் என அனைத்திலும் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்திய சந்தை மற்றும் சர்வதேச சந்தைகளில் ஐவுளி ஆராய்ச்சி மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலத்தில் கோவை இந்திய ஐவுளி ஆராய்சி மையம் மூலம் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

இந்தியா அதிக அளவில் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் நாடுகளில் இரண்டாவது நாடாக இருந்து வருகின்றது. பிரதமர் வழிகாட்டுதல் படி ஜவுளித்துறையில் உலக வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறோம். புதிய தொழில் துறையினருக்கு வர்த்தகம் செய்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையின் சிறு குறு தொழில் துறையினரின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் மிகவும் வியப்புக்குரியதாக உள்ளது. கோவை சுற்றுப்பகுதியில் தரமான பருத்தி உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளை வணங்குகிறேன். மத்திய அரசு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் தொடர்ந்து உதவியும் ஊக்கமும் அளித்து வருகிறது.

தமிழகம் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசின் பயன்களை பெற்று வருகிறது. ஜவுளித்துறை மூலமாக நாடு முழுவதும் கோடிக்கனக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஜவுளித் துறை சேர்ந்தவர்கள் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வளர்ச்சிக்கான கருத்துக்களை வழங்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஜவுளித்துறை மிகுந்த பங்களிப்பை அளிக்கும். இந்தியா கொரோனோவிற்கான பாதுகாப்பு கவச உடை தயாரிப்பில் உலகத்தில் இரண்டாவது இடம் வகிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடி கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் சொல்ல முடியாத அளவில் பல சாதனைகளை செய்துள்ளார். சேவை, நல்லாட்சி, ஏழைகளின் முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்துடன் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. 440 பில்லியன் அளவிற்கு இன்று ஏற்றுமதியை கொடுத்து கொண்டிருக்கிறோம். பருத்தி இறக்குமதி வரியை கோவையிலிருந்து சைமா அமைப்பினர் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். தொழில் துறையின் தேவையறிந்து அமைச்சர் ப்யூஸ் கோயல் ஏப்ரல் வரை இறக்குமதி வரியை நீக்கினார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு அமைச்சர் சக்கரபாணி, பருத்தி விலையை கட்டுபடுத்த வேண்டும் என்றும், மில்கள் பருத்தி வாங்குவதற்கு மானியம் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் சைமா ஆராய்ச்சி செய்து உருவாக்கிய பருத்தி விதைகள் மற்றும் பருத்தி பறிக்கும் கருவியை மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.