ஒற்றைத் தலைமையா இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை அதிமுகவில் இன்னும் ஓயாத நிலையில், டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
கடந்த 23ந்தேதி சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பல்வேறு களேபரங்களுக்கிடையே அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அந்தக் கூட்டத்தில் தனது பலத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தார். கட்சியை மீண்டும் ஒற்றை தலைமை அத்யாயத்திற்கு திருப்பி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொறுப்பேற்க வைப்பதற்கு ஜூலை 11ந்தேதி என்கிற நாளையும் குறித்துவிட்டனர் அவரது ஆதரவாளர்கள். எனினும் கட்சியில் செல்வாக்கை நிலைநிறுத்தவும், இரட்டை தலைமையை தக்க வைக்கவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கையோடு தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில் பொதுக்குழு முடிந்த கையோடு அன்று இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அதிமுகவின் ஆதரவை தமக்கு தரும்படி கேட்டார். இந்த சந்திப்பு மூலம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற அடிப்படையில் டெல்லியில் ஓ,பன்னீர்செல்வத்தின் அரசியல் அங்கீகாரங்கள் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாள் டெல்லி முகாமை முடித்துவிட்டு இன்று மாலை சென்னை திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம். விமானநிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்த தென்சென்னை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஜெயதேவி உள்ளிட்டோரும் அங்கு வந்திருந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர். கட்சியில் தனது பிடி தளராமல் இருக்க டெல்லி பயணம் மூலம் ஓ.பன்னீர் செல்வம் வகுத்த வியூகங்கள் என்ன, அந்த வியூகங்கள் வெற்றி பெறுமா என்பது அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரிந்து விடும்.







