தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு – பிரதமர் மோடி பேச்சு…!

தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியமான பங்கை ஆற்றும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மதுரை விமான நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சி பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் பேசியதாவது :

என் சகோதர சகோதரிகளே வணக்கம். புனித நகரமான இந்த மதுரை நகருக்கு வருவதை நான் பெரும் கௌரவமாக உணர்கின்றேன். மீனாட்சி அம்மைக்கும் நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தின் பெருமிதமான அத்தியாயம் இன்று. நாம் 4400 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிலவற்றை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணம் செய்திருக்கின்றோம்.

இந்த திட்டங்கள்  நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தி பல லட்சம் மக்களின் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய வகையிலே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்.  மேம்பட்ட சந்தைகளை சென்றடைய விவசாயிகளுக்கும், சாலைகள் சுற்றுலா பயணிகளுக்கும் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கும்  வர்த்தகர்களின் சுலபமான பயணத்திற்கும் உதவும்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவது நமக்கு பெருமை. இந்தியா முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் இனம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும். 2047-க்குள் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் ஒன்றிணைக்கப்படுவோம்.

தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியமான பங்கை ஆற்றும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடையவும், மாநில முன்னேற்றத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.