தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும் பின்னடவை சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்று இருந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றெடுத்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. இதற்கிடையில் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க் கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஒன்று கூடினர். அதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 37 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என தெரிவித்து வரும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு அணிகளையும் சமரசம் செய்யும் முயற்சியில் கே.பி.முனுசாமி ஈடுபட்டு வருகிறார்.







