டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்கச் சென்ற, தமிழக எம்.பி-க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் ஆரம்பித்து இன்று 71வது நாளாகும். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவூர் தலைமையில், எதிர்க்கட்சி எம்.பிகள் சென்றிருந்தனர். மேலும் அவர்களுடன் திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் மற்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், செல்வராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லியிலிருந்து காசிப்பூருக்கு பேருந்து மூலமாக சென்றுள்ளனர். அப்பேருந்தை டெல்லி போலீசார் இடையிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகளை சந்திக்க தங்களை அனுமதிக்கும்படி, காவல்துறையினரிடம் எதிர்க்கட்சி எம்பிக்கள், கோரிக்கை விடுத்தனர். எனினும், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டித்து அதே இடத்தில், எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வந்த பேருந்தில் ஏறி, மீண்டும் டெல்லி திரும்பியுள்ளனர்.