அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவர் மருந்துகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. ரெம்டெசிவர் மருந்தை வாங்க மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதும் நிலையில், மருந்து கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் 5 ஆயிரத்து 580 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்துகளை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவசேவைக் கழகம் வெளியிட்டுள்ள தகவலில், மாவட்ட மருத்துவ தலைமை மருத்துவமனைகளுக்கு 100 மில்லி கிராம் அளவு கொண்ட 5 ஆயிரத்து 580 மருந்து பாட்டில்களை விடுவிக்க ஆணையிட்டுள்ளது. மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆயிரத்து 500 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.







