தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாகக் கூறி தமிழ்நாடு அரசு தந்த உரையை முழுவதும் படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தலைமைச் செயலகத்திற்கு வந்த ஆளுநர் ரவியை, பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆனால், சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கவில்லை.
அப்போது சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களிலே தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார்.
முன்னதாக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்தனர். விசிக உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கருப்பு உடையணிந்து வந்தார்.
தொடர்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் நடைபெற உள்ளது. இதில், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட உள்ளது. ஆளுநர் உரை மற்றும் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத நிகழ்வுகள் 4 நாள்களுக்கு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், வரும் 19-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.







