“பதவி மாறினாலும் நீங்கள் மாறவில்லை” – நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜயை திரைப்பிரபலங்கள் பலரும் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் விஜயை நடிகர் விஷால் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தையும், பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியது தொடர்பான கடிதத்தையும் விஷால் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அன்புள்ள டார்லிங் முதல்வர் விஜய் அவர்களுக்கு, ​நான் உங்களை லயோலா கல்லூரியிலிருந்து அறிந்த நாள் முதல் கடந்த பல ஆண்டுகளாக அழைத்து வரும் “டார்லிங்” என்ற வார்த்தை இப்போதும் மாறவில்லை. வளரும் நட்சத்திரமாக உங்களை நான் அறியத் தொடங்கியதில் ஆரம்பித்து, அனைத்து தடைகளையும் விமர்சனங்களையும் உங்களது மௌனத்தாலும் வெற்றியாலும் தவிடுபொடியாக்கி, ஒரு ‘சூப்பர் ஸ்டாராக’ நீங்கள் ஏணியில் ஏறி உயர்ந்ததையும், இன்று நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதையும் பார்ப்பது ஒரு நெகிழ்ச்சியான பயணம்.

​இன்று உங்களது பதவியும் பொறுப்பும் மாறியிருக்கலாம், ஆனால் ஒரு மனிதராக நீங்கள் அப்படியேதான் இருக்கிறீர்கள். உங்களைச் சந்தித்தது பேரானந்தம் அளித்தது; அதே பழைய அரவணைப்பை இப்போதும் உணர முடிந்தது. கலைஞர் அய்யா, ஜெயலலிதா அம்மா, ஸ்டாலின் அங்கிள், மற்றும் என் சொந்த சகோதரர் உதயநிதி வரை பலரைக் கண்டிருந்தாலும், நம் மாநிலத்தின் முதலமைச்சரை “டார்லிங்” என்று அழைப்பது ஒரு தனி அழகு. எனக்குள் இருக்கும் அந்த ‘ஃபேன் பாய்’ (ரசிகன்) தருணம் எப்போதும் அப்படியே இருக்கும்.
​இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

முறைப்படியான பூங்கொத்து மற்றும் பொன்னாடைகளைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக அந்தத் தொகையைக் கொண்டு, உங்களின் சார்பாகவும் உங்களது பெயரிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த, கல்வி கற்க வசதியற்ற, தகுதியுள்ள மூன்று பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்ற என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி. அவர்கள் உங்களை எப்போதும் பெருமையோடு நினைவில் கொள்வார்கள்.

​மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகள் முதல்வர் சார். உங்களுக்கு எப்போதும் நேர்மறையான எண்ணங்களும் வளர்ச்சியும் மட்டுமே கிடைக்க வாழ்த்துகிறேன். உங்களது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மிகச்சிறந்த நிலையை அடைய ஆவலோடு காத்திருக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.