தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஊழல் செய்வதிலும், மக்களை ஏமாற்றுவதிலும் திமுக முதன்மையாக திகழ்வதாக குற்றம்சாட்டினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 25 எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு பாஜக அனுப்பும் என்று அவர் தெரிவித்தார்.
அண்ணாமலையைத் தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு வேகமாக முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ஏழை மக்களுக்காக கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை மேலும் ஓர் ஆண்டிற்கு பிரதமர் மோடி நீட்டித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பின்னர் பேசிய ஜெ.பி. நட்டா, பாதுகாப்பான கரங்களில் இந்திய நாடு இருப்பதாகவும், தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை என்பது பயமாக உள்ளது என்றும் தெரிவித்தார். நாட்டில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் ஏழ்மை குறைந்துள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டிற்கு 16 மருத்துவக் கல்லூரிகளை வழங்கி மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை பிரதமர் மோடி வலுபடுத்தி இருப்பதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை விமர்சித்த ஜெ.பி.நட்டா, நடைபயணம் நாட்டை ஒன்றிணைக்கவா அல்லது பிரிக்கவா என கேள்வி எழுப்பினார்.








