தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு கரும்பை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி கடந்த 24ம் தேதி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் விவசாயி கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







