“மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவல நிலையில் தமிழகம்!” – டிடிவி தினகரன் கண்டனம்!

தவெக எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்திருப்பது குறித்து டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, அவரது இல்லத்திற்கே சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

தவெக நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

“பள்ளி செல்லும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில் தொடங்கி, சொந்த கட்சி நிர்வாகியையே காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை என பெண்களை ஆபாச பொருட்களாக நினைக்கும் தவெக கட்சி நிர்வாகிகளின் மீது ஆளும்கட்சியாக இருந்தும் எந்தவித உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த தவெக தலைமையால், இன்று மாவட்டத்தின் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்க முயலும் அளவிற்கான சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

விஜய் தேர்வு செய்த எம்.எல்.ஏ.க்கள் மீது விமர்சனம்!

மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம், மக்கள் பிரச்னையை புகாராக அளிக்க வந்த நபர் மீது தாக்குதல், மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை என மக்கள் பணி செய்வதற்காக தவெக தலைவர் விஜய், பார்த்து பார்த்து தேர்வு செய்த எம்.எல்.ஏக்கள் செய்யும் கேவலமான செயல்கள், தவெக கட்சி என்பது திரையில் நாம் காணும் கற்பனை வில்லன்களை நிஜத்தில் பார்ப்பது போல் உள்ளதாக மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பெண்களின் பாதுகாப்பு யாரிடம்?

மக்களுக்காக பணிசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே, ஒரு மாவட்டத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்கும் அளவிற்கான சூழல் நிலவும் தமிழகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உட்பட தமிழகத்தின் அனைத்து மகளிருக்குமான பாதுகாப்பை வழங்குவது யார்? என்ற கேள்வியே தற்போது பிரதானமாக உள்ளது.

முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

எனவே, மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் “NO COMPROMISE” என வெட்கமில்லாமல் பேசுவதற்கு முன்பாக தங்கள் கட்சியில் இருப்பவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை கண்மூடி வேடிக்கை பார்க்காமல், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்கே சென்று அருவருக்கத்தக்க வகையில் செயல்பட்டதாகவும் சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.