தவெக எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம்!

தவெக சட்டமன்ற உறுப்பினர் செய்த தவறான செயல்கள் உண்மையென்றால் அவர் மீது முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜோதிமணி வலியுறுத்துயுள்ளார்.

தவெக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தவெக சட்டமன்ற உறுப்பினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும்,நேரில் சென்றுவிரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

இச்சமூக ஊடக செய்திகள் உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் தனது அறிவு, திறமை, உழைப்பு மூலம் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் இறுதியில் வெறும் பெண்ணாகவும், உடலாகவும் மட்டுமே பார்க்கின்ற இம்மாதிரியான மோசமான மனநிலையை நாம் நிச்சயமாக கடந்து போய்விட முடியாது.

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களில் ஏறக்குறைய 50% பேர் பெண்கள். பெண்களின் உழைப்பு,திறமை, நிர்வாகத்திறன் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும்,கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.