தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தில்லை நடராஜரை இழிவாக பேசியவரை கைது செய்யவில்லை, கனல் கண்ணனை மட்டும் ஏன் கைது செய்கிறார்கள்? இது காவல்துறையா ?அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஏவல் துறையா? காவல்துறை அரசாங்கத்திற்கு எடுபுடியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஹெச். ராஜா, ஆண்டாள் கோயிலில் தண்ணீர் எடுக்கும் கிணற்றை உண்டியலாக மாற்றி அராஜகம் செய்துள்ளனர்.இதை எடுப்பதற்கு எங்களுக்கு 10 நிமிடம் ஆகாது.
அறநிலைத்துறை நுழைந்தால் அது ஆமை புகுந்த வீடு.
இந்து மதத்தை அழித்து கொள்ளையடிக்கின்ற அறநிலையத்துறை தீய சக்திகளின் கும்பலாக செயல்படுகிறது என்றும் கூறினார்.
பரந்தூர் விமான நிலையம் குறித்த கேள்விக்கு, “நாம் ஏன் அதற்கு கருத்து சொல்ல வேண்டும்,சேலம் எட்டு வழி சாலைக்கு அனுமதிக்க கூடாது என எழுத்துப்பூர்வமாக தெரிவித்த ஸ்டாலின், இப்பொழுது அதற்கு அனுமதி அளிக்கிறார்” என்றார். மேலும், தமிழகத்திற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளார், இது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.







