ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மனு வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர். அப்போது, அவர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து, சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார். அப்போது, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி, இந்த கலவரத்தில் கலந்துகொள்ளாத அப்பாவி பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து கைது
செய்து கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும், இந்த வழக்கிற்கும் எந்த ஒரு
சம்பந்தமும் இல்லை. எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். ஆசிரியர்களுக்கு ஜாமின் கிடைக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய கேட்டுக்கொண்டு உள்ளோம்.
ஜிப்மர் மருத்துவமனை நகல்கள் இன்னும் எங்களுடைய கைகளுக்குத் தரவில்லை. அந்த நகலை நாங்கள் மேல்முறையீடு செய்து தான் வாங்க முடியும். அப்பொழுது தான் ஜிப்மர் மருத்துவமனையில் என்ன தெரிவித்துள்ளனர் என்று தெரியவரும். முதல் மற்றும் இரண்டாவது உடற்கூறாய்வில் வந்த முடிவுகளில் ஒரு சில விஷயங்களை
சொல்லியும் ஒரு சில விஷயங்களை சொல்லாமலும் மறைக்கப்பட்டு முடிவுகள்
வந்துள்ளன. நாங்கள் கேட்டுக்கொண்ட மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை சோதனை செய்திருந்தால் எங்களுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.
சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். இந்த நிமிஷம் வரை நாங்கள் நம்பி வருகிறோம். பள்ளி நிர்வாக அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனை இந்த விஷயத்தில் மறைக்க வாய்ப்பு உள்ளது. இன்று வரை மருத்துவ நிர்வாகம் பெற்றோர்களிடம் சிசிடிவி காட்சியைக் காண்பிக்கவில்லை. 5 பேர் குற்றமற்றவர்கள் என்று ஜாமீனில் வெளிவரவில்லை. சி.பி.சி.ஐ.டி.க்கு கிடைக்கும் தகவல்களை முதலில் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகப்பட்டது ஸ்ரீமதியின் நண்பர்களா என்று சிபி சிஐடி தெளிவாக
தெரிவிக்க வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா