“தமிழகம் திமுகவிடம் இருந்து விடுபட்டு தவெகவிடம் சிக்கி கொண்டது” – நயினார் நாகேந்திரன்!

தமிழகம் திமுகவிடம் இருந்து விடுபட்டு தவெகவிடம் தெரியாமல் சிக்கிக் கொண்டது என்பது தான் கசப்பான உண்மை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, தவெகவின் நிர்வாகி ஒருவர் நகைக்காக கொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை உறைய வைக்கின்றன.

ஆட்சிக்கு வந்த 2 வாரங்களிலேயே கொலை வழக்கிலும், போக்சோ குற்றங்களிலும், மாமூல் அராஜகங்களிலும் தவெக நிர்வாகிகளின் பெயர்கள் அடிபடுகின்றன என்றால் இவர்கள் திமுகவை விட பேராபத்தானவர்கள் என்று தானே அர்த்தம்? ஆளும் கட்சிக்காரர்கள் இப்படி கொலையாளிகளாக வலம் வந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாடுவார்கள்? தேர்தலுக்கு முன்பு ஊர் ஊராக ஜோசப் விஜய் நீட்டி முழக்கிய “மாற்றம்” இதுதானா?

குற்றவாளிகளுக்கு அமைச்சர் பதவியும், கொலையாளிகளுக்கு கட்சி பொறுப்பும் கொடுத்து அழகு பார்ப்பது தான் அனைவருக்குமான ஆட்சியா? பேயின் கையில் இருந்து தப்பித்து பிசாசின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டதை போல, தமிழகம் திமுகவிடம் இருந்து விடுபட்டு தவெகவிடம் தெரியாமல் சிக்கிக் கொண்டது என்பது தான் கசப்பான உண்மை”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.