IPL 2026 : ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

19 வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. பிளே ஆப் சுற்றில் குவாலிபையர் 1 ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேவேளை, எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்திய ராஜஸ்தான் குவாலிபையர் 2 ஆட்டத்திற்குள் நுழைந்தது.

இதையடுத்து, குவாலிபையர் 2 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதியது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த துருவ் ஜூரெல் 7 ரன்னில் அவுட் ஆனார். 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா கையில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் குஜராத் களமிறங்கி விளையாடியது. தொடக்கம் முதல் கில், சாய் சுதர்சன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து குஜராத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.