சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தென்இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னையில் சாந்தோம், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அதேபோல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொட்டும் மழையில் நனைந்தபடி, ஒரு சிறுவன் பாடல் பாடியபடி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் 6 நாட்களுக்கு பிறகு உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்தபடி பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









