பயமுறுத்திய யானை கூட்டம் – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த யானை கூட்டம், வாகன ஓட்டிகளை விரட்டி சென்றதால் அலறியடித்து ஓடினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி…

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த யானை கூட்டம், வாகன ஓட்டிகளை விரட்டி சென்றதால் அலறியடித்து ஓடினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்கு உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குள் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பண்ணாரியிலிருந்து தமிழ்நாடு கர்நாடகா எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடி வரை செல்லும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் காட்டு எருமைகள்,
மான்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக காட்டு யானைகள் கூட்டம் ஒன்று சாலையோரம் காத்திருந்தது. அப்போது அவ்வழியாக வந்த சுற்றுலா வாகனம் ஒன்று யானையை கண்டதும் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணிகள் யானைகளை செல்போனில் படம் பிடித்து கூச்சலிட்டனர். அதில் ஒரு காட்டு யானை எரிச்சல் அடைந்து அவர்களை மிரட்டியது. இதைக் கண்ட வாகனத்தில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம். செல்போனில் படம் பிடிக்க வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.