ஒழுங்கு முறை ஆணையத்தில் அறிவிக்காமல் மின்சார கட்டணத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் சிரமப்படக்கூடாது என அவருடைய ஆட்சிக் காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசு மீது அமைச்சர் வீண் பழி சுமத்துகிறார் எனவும், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டால் மின்சாரம் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் கூறுவதாகத் தெரிவித்த அவர், நிர்வாகத் திறமை இருந்ததால் தான் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தடையில்லாத மின்சாரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘‘நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது’ – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி’
தொடர்ந்து பேசிய அவர், மின்சார கட்டண உயர்வால் மேற்கு மண்டலத்தில் உள்ள விசைத்தறி தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் எனவும், தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரிடம் நற்பெயர் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு அவசரக் கதியில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டதாகவும், பல்வேறு இடங்களில் மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
விவசாயத்திற்கு வழங்கக்கூடிய மின்சாரம் முழுமையாக வழங்கவில்லை எனத் தெரிவித்த அவர், படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என திமுக கூறியது ஆனால், தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.








