சிதம்பரம் நடராஜர் கோவில் குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளர் 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்களிடம் கடந்த மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 19,405 புகார் மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அவற்றுள் 14,098 மனுக்களில் திருக்கோவில் நிர்வாகத்தின் மீது குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் மீது 28 முக்கிய புகார்கள் வந்துள்ளன. அதில் பெண்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், குழந்தை திருமணம் நடத்துவது, மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித வசதியும் செய்து தரவில்லை, ஆண்டாள் சிலையை எடுத்து வந்து மறைத்து வைத்துள்ளனர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் என புகார்கள் வந்துள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் சொல்லப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளர்க்கு இந்து சமய அறநிலையத்துறையின் விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இந்த புகார்கள் தொடர்பாக 15 தினங்களுக்குள் சிரம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.








