நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்று தன்னுடைய பிறந்தநாள் எனவும், 25 ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த வகையில் இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒ.பி.எஸ் கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், காவல்துறை இரண்டு தடுப்புகளையும் திறந்து விட்டிருந்தால் அன்று கொலை நடந்திருக்கும் எனக் கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது ஓபிஎஸ் தான் முதலமைச்சராக இருந்தார் எனத் தெரிவித்த அவர், அந்த பிரச்சனையை சுமுகமாக முடித்தவர் ஓபிஎஸ் எனக் கூறினார்.
இரண்டு தரப்பினர் இடையில் தான் மோதல் ஏற்பட்டது எனத் தெரிவித்த அவர், ஒரு தரப்பு என்று கூறுவது தவறானது எனக் கூறினார். மேலும், தலைமைக்கழகம் உள்ள இடம் எம்ஜிஆர் மனைவி ஜானகியால் கொடுக்கப்பட்ட இடம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்த இடத்திற்கு ஈபிஎஸ் சொந்தம் கொண்டாடுவதாக எச்சரித்தார்.
தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்றது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் எனத் தெரிவித்த அவர், அந்த சம்பவத்தை டிவியில் பார்த்துத் தான் எடப்பாடி பழனிசாமி தெரிந்துகொண்டதாகச் சாடினார். அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் ரெய்டு நடந்து வருவதாகத் தெரிவித்த அவர், சிறையிலிருந்து எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்துவாரா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்த தீர்ப்பு போல இதற்கும் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும் எனத் தெரிவித்த அவர், ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யத் தகுதி உடைய ஒரே நபர் ஓபிஎஸ் மட்டுமே எனக்கூறினார்.
அண்மைச் செய்தி: ‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம்; சபாநாயகர் அப்பாவு பதில்’
தற்போதைய முதலமைச்சர் கொரோனா தொற்றில் பதிக்கப்பட்டு இருந்த போது கூட கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார் எனத் தெரிவித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார்? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், சபாநாயகர் திறமை வாய்ந்தவர், உயர்ந்த மனிதர், உயர்ந்த உள்ளத்திற்கு உரியவர் எனத் தெரிவித்த அவர், நியாயமான தீர்ப்பு வழங்குவார் எனக் கூறினார்.
மின் கட்டண உயர்வை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்திருக்கிறார் எனத் தெரிவித்த அவர், அவருடைய ஆட்சியின் செயல்களால் தான் தற்பொழுது மின் கட்டண உயர்வுக்கு ஆளும் அரசு தள்ளப்பட்டுள்ளது, நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது எனத் தெரிவித்தார்.








