மாநில அரசின் சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநரின் போக்கு வேதனை அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 20ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், இயக்குனர் பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், ஆர்.வி.உதயகுமார், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “நவம்பர் 1ஆம் தேதி மொழி வழி மாநிலம் பிரிந்ததால் அந்த நாள் மொழி வழி தேசிய உரிமை நாளாக கடைபிடிக்கப்பட்டு, அன்று விசிக சார்பில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுவரை சிங்கள கடற்படையினர் தான் தாக்குதல் நடத்தி வந்தனர். இப்போது இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலால் வீரவேல் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய கடற்படையின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், அமித்ஷா தலைமையிலான பாராளுமன்ற குழு குடியரசு தலைவரிடம் வழங்கிய அறிக்கையில் அலுவல் மொழி குறித்த அறிக்கையின்படி, இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியை திணிக்கிற முயற்சியை கண்டிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற பாஜக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

சமீபத்தில் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக மாநில தலைவர் பேசியுள்ளார். அது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஊடகவியலாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இது போன்ற அவமதிப்புகள் ஏற்கப்பட வேண்டியது அல்ல. தமிழக பாஜக தலைவர் தன் கருத்துக்கும், செயலுக்கும் வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். தமிழக ஆளுநர் அவர்கள் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவர் பதவியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாநில அரசின் சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். ஆளுநர் போக்கு வேதனை அளிக்கிறது.
தேசியக் கொடியை நாம் ஒன்றாக வைத்திருக்கிறோம். தேசிய கீதத்தை ஒன்றாக
வைத்திருக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தை ஒன்றாக வைத்திருக்கிறோம். ஆனால் அந்தந்த மாநிலங்கள் தனித்து இயங்க அரசமைப்புச் சட்டமே அனுமதி அளித்திருக்கிறது. அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பிரதமரும் ஆர்எஸ்எஸ் தொண்டர் என்று நிரூபித்து வருகிறார்” என்று தெரிவித்தார்.







