டிவிட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் கட்டணம் செலுத்த பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதன் உரிமையாளர் எலான் மஸ்க் இன்று நூதனமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
டிவிட்டரில் ப்ளூ டிக் பயனாளர்கள் மாதந்தோறும் 8 அமெரிக்க டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 8 டாலர் என்பது இந்திய மதிப்பில் 660 ரூபாய் செலுத்த வேண்டும்.
ப்ளூ டிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
ப்ளூ டிக்கிற்கு பணம் கேட்பதால் சமூக வலைத்தளங்களில் அது பேசுப்பொருளாக மாறியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சிலர் கேலியாக சித்தரித்தும் மீம்ஸ்கள் வெளியிட்டிருந்தனர். நடிகர் சிபிராஜ் எலான் மஸ்க் அக்கவுண்ட் நம்பரை கேட்டு டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ப்ளூ டிக்கிற்கு பணம் வாங்குவதற்கான கருத்துகள் வரவேற்கப்படுவதாக எலான் மஸ்க் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 4,800 ரூபாய் கொடுத்து சட்டை வாங்குவதாகவும், 660 ரூபாய் கொடுத்து ப்ளூ டிக் பெற்று கொள்ள விருப்பமில்லையா என்பதை குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், 30 நிமிடங்களில் காலியாகும் குளிர்பானத்திற்கு 660 ரூபாய் செலவு செய்வதற்கு சிரிப்பது போன்றும், ப்ளூ டிக்கிற்கு 660 ரூபாய் செலவு செய்ய கஷ்டமாக இருப்பதாகவும் பொம்மை வைத்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-இரா.நம்பிராஜன்









