ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சட்டபேரவை கூட்டம் கடந்த 9ம் தேதி தொடங்கியது.

அப்போது, அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் உள்ள 65வது பத்தியை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து விட்டார். அதில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா’ என்ற வார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் அவற்றை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து விட்டார்.

இதனால் பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஆளுநர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே பாதியில் அவையில் இருந்து வெறியேறினார். இந்த சம்பவம் அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாகவும், இந்த பயணத்தின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, எம்பிக்கள் ஆ.ராசா, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரை நேற்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.