‘பாஜகவின் அடாவடி அரசியலுக்குத் தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்’

பாஜகவின் அடாவடி அரசியலுக்குத் தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்தியத் தலைமையின் ஆதரவோடு தொடரும்…

பாஜகவின் அடாவடி அரசியலுக்குத் தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்தியத் தலைமையின் ஆதரவோடு தொடரும் பாஜகவின் அடாவடி அரசியலை, தமிழ்நாடு அரசு உரியச் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநில செயற்குழு வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை, அரசியலாக்கிட பாஜகவினர் முயற்சித்தார்கள். அது சாத்தியமாகாத அதிருப்தியில், நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீசி வன்முறையைத் தூண்டும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. குற்றமிழைத்தோர் அனைவருமே பாஜகவினர் என்பதும், திட்டமிட்டே வன்முறையில் ஈடுபட்டுள்ளதும் வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனாலும், பாஜக தலைமை திசைதிருப்பிக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் தனித்த சம்பவமாக இல்லை. கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி உண்மைக்கு மாறான தகவலைத் தொடர்ந்து கூறி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள பாரத மாதா ஆலயத்திற்குச் சென்ற பாஜக நிர்வாகிகள், பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவினரின் இத்தகைய அடாவடி முயற்சி கடும் கண்டனத்திற்குள்ளானது. காவல்துறையும் வழக்குப் பதிவு செய்தது. ஆனால், பாஜகவின் தலைமையோ இதை மென்மையான வார்த்தைகளோடு ‘கதவு சேதமாகவில்லை’ என்று வியாக்கியானம் செய்தது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 2000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்’

மேலும், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரான பாஸ்கர், பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்டுள்ளார். பாஜக தலைமையிலிருந்து இதற்கும் எந்த விளக்கமோ கண்டனமோ வரவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், பாஜகவின் மாவட்ட தலைவரே இத்தகைய குற்றச்செயல்களில் தயக்கமின்றி ஈடுபட்டுள்ளார் என்பதைப் பார்க்க முடிகிறது. ‘பெரியார் சிலையை உடைப்போம்’ என்று வன்முறை உருவாக்கும் விதமாகப் பேசுவது, வாகனங்களை உடைத்து சேதமாக்குவது, கோயில் வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று ஆங்காங்கே பல்வேறு அடாவடிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில், தனிப்பட்ட விரோதத்தில் நடந்த கொலையை, மத அடிப்படையில் திசை திருப்பும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டனர். காவல்துறையின் முறையான விசாரணைக்குப் பின், பாஜக சதிச்செயல் அம்பலமானது. திருப்பூரில் பாஜக நிர்வாகி ஒருவரின் உயிரிழப்புயைக் கொலையாக ஜோடித்து ‘பந்த்’ போராட்டம் வரை நடத்தினார்கள். தொடரும் இவர்களின் அடாவடி அரசியலுக்கு இதுவெல்லாம் எடுத்துக்காட்டுகள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பாஜகவின் அடாவடி அரசியலை மக்களும், ஜனநாயக சக்திகளும் வலுவாகக் கண்டிக்க முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதோடு, இவர்களின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரசு உறுதியான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.