பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பள்ளிக்கரணை பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி கட்டுமானப்பணிகள் முழுமையாக தடைபட்டுள்ளதாக் கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களி்ன் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சதுப்பு நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, கிரெடாய் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
அதே வேளையில், சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறை செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தனது தரப்பு வாதத்தையும் கேட்ன பின்னரே வழக்கில் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கேவியட் மனுவை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.




