தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) தொழில்நுட்பம் மற்றும் களப்பணிப் பிரிவுகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால், மின்தடை புகார்கள் உள்ளிட்ட சேவைகளை விரைந்து கையாள்வதில் சிரமம் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு, அப்போதைய திமுக அரசு 8,000 கள உதவியாளர்களை நியமிப்பதற்கான அரசாணையை வெளியிட்டது. இருப்பினும், அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், தற்போது அதே எண்ணிக்கையிலான பணியாளர்களை அடுத்த 2 ஆண்டுகளில் நியமிக்க புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2027-ல் 5,000 பேர் நியமனம்!
இதன்படி, 2027-ம் ஆண்டில் 5,000 பணியிடங்களும், 2028-ம் ஆண்டில் 3,000 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ. (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.35,548 வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 கள உதவியாளர்களை நியமிப்பதற்கு முதற்கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கான ஆண்டு செலவினம் ரூ.341.26 கோடியாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது.
36,000 காலிப் பணியிடங்கள்!
மின்வாரியத்தில் கள உதவியாளர்கள் மற்றும் கம்பியாளர்கள் உள்ளிட்ட பணிகளில் சுமார் 36,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும், கணிசமான அளவில் காலியிடங்கள் தொடர்ந்து இருக்கும் நிலை உள்ளது.
இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2021-ல் 9,600 கேங்மேன் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு, மின்வாரியத்தில் மேற்கொள்ளப்படும் முக்கியமான ஆட்சேர்ப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
பணிகளைத் தெளிவாக வரையறுக்கக் கோரிக்கை!
இதற்கிடையில், கள உதவியாளர்களின் பணிகள் என்னென்ன என்பதை அரசு தெளிவாக வரையறுக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் மத்திய அமைப்பின் (COTEE) மாநிலத் தலைவர் எஸ். கண்ணன் வலியுறுத்தியுள்ளார். கள உதவியாளர்களை அவர்களுக்குரிய பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும், கல்லூரிப் பட்டப்படிப்பு தகுதி கொண்ட மதிப்பீட்டாளர்களுக்கான பணிகளுக்கு மாற்றாக அவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
8,000 கள உதவியாளர்களை நியமிக்கும் இந்த நடவடிக்கை, மின்வாரியத்தின் களப்பணிகளை மேம்படுத்துவதுடன்,மின்தடை தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காணும் வேகத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




