மத்திய அரசு கொடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தாலே போதுமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் மக்கள் நல அறிவிப்புகள் இல்லை எனக் கூறி தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நிகழ்வில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பள்ளி கல்வி துறைக்கு 36,000 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது அரசு. ஆனால், மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு சென்று படிக்கும் அளவிற்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. தனியார் பள்ளியில் சென்று படிக்கும் நிலையில் உள்ளது. தனியார் பள்ளியை ஊக்குவிக்கும் அரசு இது” என்று விமர்சித்தார்.
பட்டியலின மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்ற அவர், இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏன் பேரவையில் கூறவில்லை என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசு கொடுக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தாலே போதுமானது, தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டே தேவையில்லை, இந்த பட்ஜெட் என்பது 4 பேரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் அண்ணாமலை கூறினார்.








