வேலைநிறுத்தம் நடைபெறும் 28, 29ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “அரசு ஊழியர்கள் 28, 29ம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது, அன்றைய தினங்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறை வாரியாக காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுபோலவே தற்போது மின்சார வாரியமும் “பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் கிடையாது” என்று தெரிவித்துள்ளது. அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.








