பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை முதன்முறையாக இன்று மாலை சந்தித்தார். அதற்காக, இன்று காலை 7.30 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் சென்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் டெல்லி தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்று வரும் திமுக அலுவலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு இல்லம் சென்றடைந்த மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் அளித்தார்.

சந்திப்புக்குப் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: பதவியேற்ற உடனேயே கொரோனா பணிகள் இருந்ததால், பிரதமரை சந்திக்க முடியவில்லை. இப்போது அவர் ஒதுக்கி கொடுத்த நேரத்தில் சந்தித்தேன். பிரதமர் வாழ்த்துகளை சொன்னார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வருவதாகவும் தெரிவித்தார். அவரிடம் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தேன்.
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும், செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், திருக்குளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்,
மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினேன். அமைச்சர்களுடன் ஆலோசித்து நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்தார். பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.







