நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் என்றும் அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
“நடிகர் விவேக் மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். ஈடு இணையற்ற கலைச் சேவையலும் சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் விவேக். அவரது மறைவு, தமிழ் திரைப்படத் துறைக்கும், ரசிக பெருமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவருடைய நடிப்பு மற்றும் சமூக வேவை என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
விவேக் தன்னுடைய சொந்த வாழக்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணிகளில் அரசிற்கு உறுதுணையாக திகழ்ந்தவர்.
அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நினைவாக்கும் வகையில், ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு, அதனை தீவிரமாக செயல்படுத்தி வந்தார்.
நடிகர் விவேக்கை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் ஆன்மா இறைவனிடம் சேர பிரார்த்திக்கிறேன்.”







