நடிகர் விவேக்கிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில், அவர் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட முக்கிய திரைதுறைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக…

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில், அவர் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட முக்கிய திரைதுறைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவர் மறைவுக்கு திரைதுறைப் பிரபலங்கள், பலர் தங்களின் ட்விட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விவேக் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் தெரிவித்ததாவது,

“நடிகர் விவேக்கின் இறப்பு நம்பமுடியாத ஒன்று, அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும், திரைத்துறையில் பல ஆண்டுகள் மக்களை மகிழ்வித்து வந்த நீங்கள் என்றென்றும் எங்கள் நினைவுகளில் நிறைந்து இருப்பீர்கள்.”

நடிகை ராதிகா தனது ட்விட்டரில்,

“நண்பர் நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவருடன் பல சிறந்த நினைவுகள் என் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது. அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.”

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டரில்,

“சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு … வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!”

திரைப்பட நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில்,

“நடிகர் விவேக்கின் மரணச் செய்தி அறிந்து மனமுடைந்து விட்டேன், அவர் விட்ட சென்ற நற்பணிகளை தொடர்ந்து செய்ய நான் முயற்சிக்கிறேன்.”

இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டரில்,

“திரை வாழ்க்கையில் மூட நம்பிக்கைக்கு எதிராகவும், சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை, தான் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களை மகிழ்வித்து, நிஜ வாழ்க்கையில் தான் கொண்ட கொள்கையில் நேர்மையுடனும் என்மீது பேரன்பு கொண்ட சின்னக்கலைவாணர் விவேக்கின் மறைவு அதிர்ச்சளிக்கிறது.”

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டரில்,

“மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு நான் தீவிர ரசிகன். தனது நகைச்சுவையில், சமூக கருத்துகளை மக்களிடம் சேர்த்தவர். அவர் எப்போதும் நம் இயதங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்”

நடிகர் பிரசன்னா தனது ட்விட்டரில்,

“நடிகர் விவேக் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவர் திரைத்துறையிலும் சமூக சேவையிலும் அவர் ஆற்றிய பணி என்றென்றும் நமது மனதில் நீடித்து இருக்கும்.”

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கூறியதாவது, “தமிழ் திரையுலகம் நல்ல மனிதரை இழந்துவிட்டது. அவருடைய குடும்பம், நண்பர்கள், திரைத்துறை அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் ஆறுதல்தர வேண்டுகிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.