ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்கு வந்த அமெரிக்க ராணுவம், கடந்த 20 ஆண்டுகளாக தலிபானுக்கு எதிராகப் போரிட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் இப்போது அங்கிருந்து வெளி யேறி வருகிறது.
இதனால் தலிபான்களின் கை அங்கு ஓங்கியிருக்கிறது. அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள், அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று கைப்பற்றினர். அந்த நாட்டின் பெரும்பாலான நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலைநகர் காபூலை அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுற்றி வளைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நகரை கைப்பற்றும் நோக்கில் கடும் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் அப்துல் சத்தார் மிர்ஸாக்வால், தலைநகர் காபூலை தாக்க முடியாது என்றும் மாற்றங்கள் அமைதியாக நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். காபூல் மக்களுக்கான பாதுகாப்பை பாதுகாப்பு படைகள் வழங்கும் என உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








