தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணியத் தலமான
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கன்னியாகுமரி:
இன்று அதிகாலை 4 மணி முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித
நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து
வருகிறது. தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும் நடந்தது.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதல் கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடினர். பூசாரிகள் சொல்லக்கூடிய பல்வேறு வேத மந்திரங்களை பின்பற்றி அவர்களது முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்:
தை அமாவாசையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை,
கெடிலம், தென்பெண்ணயாற்றின் கரைகளில் அதிகாலையில் மக்கள் குவிந்தனர்.
பின்னர் நீர்நிலைகளில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி வழங்கி அவர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். முன்னோர்களுக்கு படைக்கப்பட்ட உணவு,
புத்தாடைகளை ஏழைகளுக்கு வழங்கினர். மேலும், பசுக்களுக்கு அகத்தி கீரை, வெல்லம், பச்சரிசி வழங்கினர்.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி,அரியலூர், பெரம்பலூர் , கரூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு தை,ஆடி,புரட்டாசி உள்ளிட்ட அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் இன்று தை அமாவாசை என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப
படித்துறையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி வாழை இலை,பூஜை பொருட்கள்,அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்று ஆர்வமுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
நாகப்பட்டிணம்:.
தை அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர். மாதந்தோரும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினமும் கருதப்பட்டு வருகிறது. இதில் தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
தை அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து ஆசிகளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதன்படி இன்று காமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம், பிண்டம் வைத்து பின்னர் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினர். ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை தினத்தில் காமேஸ்வரம் கடலில் புனித நீராட அதிக அளவு பக்தர்கள் வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அங்கு மாவட்ட காவல் துறை, தீயணைப்புத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் காமேஸ்வரம் மீனவ கிராமம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.