இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கு என்னுடைய ஆதரவு இருக்கும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக இன்று காலை தெரிவித்ததோடு, தமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதனால் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தினர். அதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் முடிவில் ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு மட்டுமே ஆதரவு. ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்து போட்டியிட வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நிலவும் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்.








