டி-20 உலகக்கோப்பை ; ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் – வங்கதேசம் திட்டவட்டம்……!

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவது ஓவர் ஐசிசி உலகக் கோப்பைத் தொடரானது இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இதன் போட்டிகள் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும்  மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டித்து பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா அணியிலிருந்து வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

இதனால் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி பங்கேற்காது எனவும், போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஐசிசியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் வங்கதேச அணியின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, அட்டவணை தயாராகிவிட்டதால் வங்கதேச அணிக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவது சிக்கலான காரியம் எனவும், இந்தியாவில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் நாளைக்குள் (ஜனவரி 21) முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

மேலும் வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில், தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்குப் பதிலாக மாற்று அணியாக டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்து இடம்பெறும் எனவும் எச்சரித்தது.

ஐசிசியின் கெடு நாளை முடிவடையும் நிலையில் ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: பிசிசிஐ தரும் அழுத்தத்தின் காரணமாக ஐசிசி எங்களுக்கு அழுத்தம் தர முயற்சித்தால் நாங்கள் அதற்கு அடிபணிய மாட்டோம். எந்த ஒரு காரணமுமின்றி ஐசிசி வைக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கடந்த காலங்களில்  இந்தியாவில் கிரிக்கெட் தொடர்களில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அணி கூறியதால், போட்டி நடத்தப்படும் இடங்களை ஐசிசி மாற்றியது. அதன் அடிப்படையில், வங்கதேசத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று வங்கதேச அணிக்கான போட்டி நடைபெறும் இடங்களை ஐசிசி மாற்றித் தர வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.