தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்டமசோதா மீதான செயலாக்கத்தை நிறுத்திவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து
12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : 12 மணி நேர வேலை; நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம் தொடரும் – சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன்
நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 12 மணி நேர வேலை சட்டத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி மே 12-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் அரசு சார்பில் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், 12 மணி நேர வேலை சட்டமசோதா மீதான செயலாக்கத்தை நிறுத்திவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள்
(தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு எண்.8/2023 என்ற 12 மணி நேர வேலை சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








